சாமியே சரணம் !


ஒவ்வொரு நாளிலும் ஏதோவொரு சுவாரசியம் இருக்கத்தான் செய்கிறது. ஒரு சில நாட்கள் சில அபூர்வமான நிகழ்வுகளைத் தன்னுள் கொண்டு விடிகிறது. அந்த வகையில் நேற்றும் (09.06.09) என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தி பிரமிக்கவைத்த் நாள்.
சில சம்பவங்களின் தாக்கம் அவை நிகழும்போது ஏற்படும் தாக்கத்தைவிட, அவை நகர்ந்து சென்றபின் ஏற்படும் தாக்கம் அதிகமாக இருக்கும்.

சரி, கதைக்கு வருகிறேன்....

நேற்று அலுவலகலத்தில் கூட்டப்பட்டிருந்த கூட்டத்தில் வழக்கம்போல் நாம் இதுவரை செய்தது என்ன, செய்யவேண்டியது என்ன மற்றும் இந்த மாதம் அறிவிக்கப்பட்டிருக்கும் போட்டிகள் என்ன என்பது சம்பந்தமாக விவாதித்துக் கொண்டிருக்கும்போது ’உச்சகட்டமாக பிரிமியம் ஒரு கோடி கொண்டுவந்தால் அதற்கான பரிசுத்தொகை இவ்வளவு’ என்றார் கிளை அதிகாரி. அதைக் கேட்கும் போது மனதிற்குள் இருக்கும் நினைப்பு, பங்குபெற்ற அனைவரின் உதடுகளிலும் அமைதியான புன்முறுவலாக வெளிவந்தது.

கூட்டம் முடிந்து நான் வெளியேவந்த ஐந்து நிமிடங்களில் எனக்கு “சாமி”யிடமிருந்து ஃபோன்.
“மாப்ளை, அந்த 'ரெண்டு கோடி பிரிமியம்' பாலிஸி கம்ப்ளீட் ஆயிடுச்சுடா”

நல்ல செய்திகள் வந்தவுடன் வாழ்த்து தெரிவிக்கும் சாதாரண நடைமுறை நாகரீகச் செயலைச் செய்துவிட்டு, நான் காத்திருந்த என்னுடய முகவர் முருகேசன் கொண்டுவந்திருந்த ‘ஆறு மாத்த்திற்கு ஒருமுறை 5000 கட்டுகின்ற மார்க்கெட் ப்ளஸ் முன்மொழிவை சரிபார்த்து, அதில் இணைக்கப்படாமல் இருந்த ‘20 வருடத்தில் என்ன வரலாம்’ என்ற எடுத்துக்காட்டுப் படிவத்தில் கையெத்துப் பெற்றுவரச் சொன்னேன்.
காத்திருந்த வேலைகளை முடித்துவிட்டு, ‘சாமி’யின் சந்தோஷச் செய்தியை என் அலுவலக நண்பர்கள் மற்றும் அடிக்கடி தொடர்பில் இருக்கும் ‘சாமி’க்கும் எனக்கும் உள்ள பொதுவான நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டேன்.

மறுபடியும் ’சாமி’யைத் தொடர்புகொள்ள முயற்சித்தபோது, அவனுக்காக ஏர்டெல்லில் புதிதாக நியமித்திருந்த இனிமையான குரல்கொண்ட ஒரு பெண் ‘தற்சமயம் பிஸியாக உள்ளார்’ என்ற வசனத்தையே திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தாள்.

வெறுத்துப் போய், அவனுடன் பணியாற்றும் டேபிள் டென்னிஸ் சாம்பியனுக்குப் ஃபோன் செய்தேன். அவர் மூலமாகத்தான் ‘சாமி’க்கு CM (சீஃப் மினிஸ்டர் இல்ல சீஃப் மேனேஜர்), DM, SDM, RM என்று எல்லைகள் கடந்து வாழ்த்துச் செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணமாய் இருப்பதைத் தெரிந்து கொண்டேன்.

மறுபடி மாலை 7 மணிக்கும் லைன் கிடைக்காததால், சாமியின் வெற்றிகளுக்கு காரணமான பின்புலம் - அதாங்க, அவங்க மனைவியிடம் ’ உங்க ஆத்துக்காரர் வந்ததும் மாமியாரை விட்டு திருஷ்டி சுத்திப்போடச் சொல்லும்மா’ என்ற தகவலை என்னுடைய வாழ்த்துக்களோடு தெரிவித்தேன்.

இதனிடையே, திருச்சி கிளை ஒன்றில் பணியாற்றும் - சற்றுகாலம் வரை தன்னலம் பாராமல் அவ்வப்போது ATC யில் வகுப்பு எடுத்துக்கொண்டிருந்த - நண்பர் பேசினார். அவர் கிளையில் SDM தலைமையில் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது தான் தனக்கு இந்த ‘வரலாற்றுச் செய்தி’ கிடைத்ததாகச் சொன்னார்.
மேற்படி நண்பர், தஞ்சைக் கோட்டத்தின் ‘பொன்விளையும் பூமியும்’, வாஸ்து சாஸ்திரத்தின்படி அமையப்பெற்றதுமான குளித்தலைக் கிளையிலிருந்து திருச்சிக்கு மாற்றல் பெற்றுச் சென்றது குறித்து இப்போது வருத்தப்படுவார்.

இரவு 9.30 ற்கு ‘சாமி’ வரம் தந்தார். அவராகவே தொலைபேசி லைனில் வந்தார்.
நான் என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு முதலில் கேட்ட கேள்வி:

“அம்மா திருஷ்டி சுத்திப் போட்டாளா?”

சாமி: “ டேய், நீதான் சொன்னியா? நுழைஞ்ச உடனே உக்காரச் சொல்லி அதைத்தான் செஞ்சாங்க!”

அப்பா...! Sentiment’ லா எனக்கு ஒரு நிம்மதி.

அதன் பிறகு 20 நிமிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

இரண்டு கோடி... அதாவது 2 ற்கு பின்னே 7 பூஜ்யங்கள்.
2, 0 0, 0 0, 0 0 0 !
டிடியில் வரையப்பட்டிருந்த எண்கள் !

இந்தத் தொகையை முன்மொழிவில் எழுதவே கூசும் விரல்கள் !

காசோலையில் எழுதும் போது பிழை வந்துவிடக்கூடாது என்று நடுங்கும் விரல்கள் !

அப்பேற்பட்ட வணிகத்தை என் நண்பன் முடித்திருக்கிறானென்றால் அதை வெறும் தொலைபேசியில் சம்பிரதாயக வாழ்த்தாக மட்டுமே பதிக்காமல் பரஸ்பரம் ‘சாமி’ யோடு பழகும் அனைவரின் பார்வையிலும் பதிவு செய்யும் பொறுட்டே இந்தப்பதிவு.


ஞாலம் கருதினும் கைகூடும்- காலம்
கருதி இடத்தாற் செயின்..னாரு வள்ளுவர்!


நல்ல முடிவெடுக்கணும்னாலே நாம அந்த நொடியில் வேற சிந்தனை இல்லாம வாழ்ந்தா போதும்! ஏன்னா,

‘எல்லாத்தையும் கவனிக்கிற ஆளாலத்தான் எல்லாரும் கவனிக்கிற ஆளா மாறமுடியும்.’


”படியேற பயந்தேன்.

ஏறியபின் வியந்தேன்.

வெற்றியின் தூரம் வெகுதொலைவில் இல்லை என்று...”

வெள்ளத்து அனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு


ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பற்றிய சில அளவீடை பெற்றிருக்கிறான். அவனது ஆழ் மனத்தில் அவனைப் பற்றிய சில வரையறைகள், சில அகல உயர நீளங்களை அளவீடாக உருவாக்கி இருக்கிறான். அதுவே அவன் தன்மதிப்பு, அதுவே அவன் தன்நிலை. அந்த அவனது சிகரத்தை தாண்டி அவன் அதற்கு மேலே செல்வதில்லை. வெறும் செல்வ வளம் மட்டமல்ல, சமுதாயத்தில் மனிதனது அங்கீகாரம், பொலிவான தோற்றம், உடல்நலம் யாவும் அந்த தன்மதிப்பை பொறுத்து அமைகிறது.


நாம் பெறும் மிகச் சிறிய வெற்றிகூட நமக்கு வெற்றி மனப்பான்மையை உருவாக்குகிறது. அந்த வெற்றி மனப்பான்மை மேலும் பல வெற்றிகளை உருவாக்குகின்றன. அது போலவே தோல்வி, தோல்வி மனப்பான்மையை உருவாக்கி தோல்வியை இழுத்து வருகிறது.

பல வெற்றிகளை குவித்த வெற்றி வீரர்களின் முகத்தில் அந்த வெற்றியின் ரேகைகள

படர்ந்திருக்கின்றன என்கிறார் எமர்சன். அந்த வெற்றி ரேகைகள், அந்த வெற்றி நோக்கு மேலும் மேலும் வெற்றிகளை ஈர்க்கின்றன.

செல்வம் வேண்டும், வாழ்வு செழிக்க வேண்டும், வான்புகழ் பெற வேண்டும், அது வேண்டும், இது வேண்டும் என்று வாயால் பேசிக் கொண்டிருந்தால் போதுமா?


செய்யும் செயலை நன்றாக செய்தால் அதற்கான பலன் நம்மை தேடிக்கொண்டு வரும்.

நிழலை நோக்கிச் சென்றால் நிழலை பிடிக்க முடியுமா? ஒளியை நோக்கிச் சென்றால் நிழல் நம் பின்னால் வரும்.

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவுஇலா

ஊக்கம் உடையான் உழை”


எங்கே ஊக்கமும் அதன் பலனான விடாமுயற்சியும் இருக்கிறதோ, அங்கே செல்வம் வழி கேட்டுக்கொண்டு வரும். யாரிடம் விடா முயற்சி இருக்கிறதோ அவனிடம் இறைவனின் அருள் இருக்கிறது. அங்கே வெற்றி தேவதை வசிக்கிறாள்.


முயலும் வரை முயல்வதல்ல முயற்சி
முடியும் வரை இடைவிடாமல் முயல்வதே முயற்சி
- எங்கோ கேட்டது


“நிறைய வேலை செய்யாதீர்கள், ஆனால் நிறைவாக வேலை செய்யுங்கள்

குறைவாக வேலை செய்யுங்கள், ஆனால் குறையில்லாமல் செய்யுங்கள்.”

'சாமி'யின் சாதனை கோட்டத்தில் வரலாற்றை உருவாக்கியிருக்கிறது.


(வணிகம் வந்த கதை பற்றி சாமி சொல்லிக் கேள்விப்பட்டதை பிரிதொருமுறை எழுதுகிறேன்)


இந்த சிறப்பிற்கு மூலகர்த்தாவாக இருக்கும் முகவர் திரு.அய்யாவு அவர்களின் முயற்சி பன்மடங்கு பெரிது.

நம்மைத் தவிர்த்து, நம்முடைய முயற்சிகள் வெற்றிபெற வேண்டும் என்று எண்ணும், வேண்டும் உள்ளம் ஒன்றிருந்தால், வெற்றி நம்மைச் சுற்றிசுற்றி வரும்.

முகஸ்துதிகளுக்கு நடுவே இன்று அத்தகைய எண்ணம் படைத்தவர்கள் அபூர்வம் ஆகிவிட்டார்கள்.


ஒவ்வொரு முகவருக்கும் அகம், புறம் தெரிந்த ஆத்மார்த்தமான நண்பர் என்று ஒருவரைக் குறிப்பிட வேண்டுமென்றால் அது அவனது வளர்ச்சி அலுவலராகத்தான் இருப்பர்.



இங்கு மேலும் ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். இத்தகைய சாதனையாளரை கௌரவிக்கும் பொறுட்டு SDM திரு.இசக்கிராஜன் அவர்கள் அய்யாவூ அவர்களின் இல்லத்திற்கு வர விருப்பம் தெரிவித்திருக்கிறார்.


ஆனால், சாமியோ திரு. அய்யாவூ அவர்கள் விருப்பத்திற்கிணங்க திருச்சிக்கே அழைத்து வந்துவிட்டார். அய்யாவூ மற்றும் குடும்பத்தினர் பூரிக்கும் அளவில், SDM சிறப்பாக அவர்களை கௌரவித்த பிறகு அவர்களோடு இரண்டு இட்லி சாப்பிடிவதைப் பெருமையாகக் கருதி அவர்களுடன் சாப்பிட்டுவிட்டு திரும்பியிருக்கிறார்.


“நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொறுட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை !”


எவையெல்லாம் அழகாக இருக்கின்றனவோ
எவையெல்லாம் அர்த்தத்துடன் இருக்கின்றனவோ
எவையெல்லாம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருமோ
அவை அனைத்தும் உங்களுக்குக் கிடைக்கட்டும்!
இன்றும் நாளையும் என்றும்.

0 comments: